Monday, March 3, 2008

அலெக்சாண்டர் கிரகம் பெல்லின் (Alexander Graham Bell) பிறந்தநாள் இன்று!

அலெக்சாண்டர் கிரகம் பெல், ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847 ஆம் ஆண்டு மார்ச்சு 3 ஆம் நாள் தோன்றினார்.தந்தையார் பெயர் மெல்வில் பெல் (Melville Bell) என்பதாகும்.ரகம் அவர்களின் தாயார் எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் (Elisa Grace Symonds) இசையில் ஆர்வம் கொண்டவர்; ஓர் ஓவியரும் கூட. இளம் வயதில், கிரகம் வீட்டிலேயே கல்வி கற்று வந்தார்.

1865 ஆம் ஆண்டு மின்சாரத்தின் வழி, இடம் விட்டு இடம் பேச்சொலியைச் செலுத்தும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. இதற்குக் காரணமாய் அமைந்தது அவர் படிக்க நேர்ந்த ஹெர்மன் ஹேய்ம்ஹோல்ட்ஸ் (Herman Heimholtz) என்பவர் எழுதிய 'வியப்பூட்டும் குரலொலி (The Sensation of Tone) ' என்ற நூலே.1866 ஆம் ஆண்டு முதற்கொண்டு பல்வேறு ஆய்வுகளில் கிரகம் பெல் ஈடுபட்டார்.1873 இல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் குரலுறுப்புகள் பற்றிய பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிரகம் பெல்லுக்குக் கிடைத்தது.

ஒரே கம்பியில் ஆறேழு செய்திகளை அனுப்பக்கூடிய ஒத்திசைவான தந்திப்பொறி (Harmonic Telegraph) ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை 1874 இல் கிரகம் பெல் பெற்றார். இத்தந்திப் பொறியில் அவ்வப்போது சில சிக்கல்கள் எழவும், அதை நீக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோது மின்சாரத்தின் வலிமைக்கும், காற்றின் ஒலி அலைகளுக்கும் தொடர்பு இருப்பதை அவர் கண்டறிந்தார். தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்ற மின் தொழில் வல்லுநரின் ஒத்துழைப்புடன் தனது ஆய்வைக் கிரகம் பெல் தொடர்ந்தார்; மனிதக் குரல்களை வேறோர் இடத்திற்கு அனுப்ப இயலும் என்ற முடிவுக்கு வந்தார்; இதுவே தொலைபேசியை வடிவமைப்பதற்கு வழி வகுத்தது.

தொலைபேசியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரே (Elisha Grey) மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரும், ஸ்காட்லாந்து நாட்டவரான கிரகம் பெல், ஜெர்மனியின் பிலிப் ஆகிய நால்வரும் தனித்தனியே முனைந்து பணியாற்றி வந்தனர். இறுதியில் கிரகம் பெல் வெற்றி பெற்றார்; 1876 ஆம் ஆண்டு மார்ச்சு 10 ஆம் நாள் அமெரிக்க அரசு கிரகம் பெல் அவர்களின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டு தொலைபேசிக்கான காப்புரிமையை வழங்கியது. 1876 ஜூன் திங்களில் அமெரிக்காவிலுள்ள பிலெடெல்பியா என்னும் நகரில், அறிஞர்கள் முன்னிலையில் தொலைபேசி எவ்வாறு பணி புரிகிறது என்பதைச் செயல் முறையில் விளக்கிக் காட்டினார். அனைவரும் பாராட்டிப் போற்றினர்; கிரகம் பெல்லுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப் பெற்றது. அதே ஆண்டு செப்டெம்பர் திங்களில், ஸ்காட்லாந்தில் இரண்டாம் முறை, தனது கண்டுபிடிப்பைப் பற்றி செய்முறை விளக்கம் செய்தார். முதல் முறையாக நீண்ட தூரத் தொலைபேசிக் கம்பி இணைப்பு, குயின்ஸ் தியேட்டருக்கும் கேண்டர்பரிக்கும் இடையில் நிறுவப்பெற்றது. 1877 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் 'பெல் தொலைபேசி நிறுவனம் ' உருவாக்கப்பட்டது. கிரகம் பெல் தனது கண்டுபிடிப்பால் முப்பதாவது வயதில் பெரும் புகழுக்கும், செல்வத்திற்கும் சொந்தக்காரரானார். 1880 ஆம் ஆண்டு, பிரெஞ்சு அரசு அவருக்கு 50,000 பிராங்கு தொகையைப் பரிசாக அளித்தது; அப்பணத்தைக் கொண்டு வாஷிங்டனில் ஓர் ஆய்வுக்கூடத்தை பெல் நிறுவினார். ஒளிக்கற்றை வாயிலாக ஒலி அலைகளை அனுப்புவதற்கான ஆய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. கம்பியில்லாமலே செய்திகளை அனுப்புவதற்கான முயற்சியின் தொடக்கம் என இதனைக் கருதலாம். 1880 இல் கிரகம் பெல் ஒளிபேசியைக் (photophone) கண்டுபிடித்தார்; அவரது கருத்துப்படி இது தொலைபேசியை விடவும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும்.

1922 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 2 ஆம் நாள் அவர் மறைந்தபோது அமெரிக்காவில் எல்லாத் தொலைபேசிகளும் ஒரு நிமிட நேரம் நிறுத்தப்பட்டு அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இன்று கிரகம் பெல்லுக்கு மரியாதை செலுத்துமுகமாக கூகிள் வெளியிட்ட தனது அடையாளச்சின்னத்தை(Logo) பாருங்கள்


கிரகம் பெல் கண்டுபிடித்த தொலைபேசியின் படங்களும் கீழே..


No comments:

Custom Search